Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் காடையர்கள் இளைஞர் மீது தாக்குதல்!மோட்டார் சைக்கிள் எரிப்பு!!

வவுனியாவில் காடையர்கள் இளைஞர் மீது தாக்குதல்!மோட்டார் சைக்கிள் எரிப்பு!!

வவுனியா சோபாலபுளியங்குளம் பகுதியில் இளஞ்செழியன் விளையாட்டு கழகத்தின்; தலைவர் சிதம்பரநாதன் நவராசா மீது (ஒக்டோபர் 10) காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், அவருடைய மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது.


வவுனியா சோபாலபுளியங்குளம், கற்குளம், யங்கராவூர், கற்பகபுரம் ஆகிய கிராமங்களில் அரச காணிகளை அபகரித்து தனியாருக்கு விற்பனை செய்துவந்த கும்பல் ஒன்றை அரச அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டியதுடன், மேலும் அரச காணிகளை அபகரித்து விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த குறித்த சமூக செயற்பாட்டாளராகிய இளைஞர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்தில் இளைஞர்களின் நலன் கருதி சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றேன். அத்துடன் எமது கிராமத்தில் நடைபெறும் சமூகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நான் செயற்பட்டு வருவதால், என்னை குறிவைக்கும் சமூக விரோதிகள் என்மீது கொலை முயற்சி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது கிராமத்திலுள்ள சமூக விரோதிகள் என்னை கொலை செய்யும் நோக்கத்துடன், திட்டமிட்ட முறையில் என்மீது இரண்டு முறை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இக்கொலைவெறி தாக்குதல்களிலிருந்து நான் தப்பியிருந்த போதிலும் இரண்டு முறையும் எனது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் காடையர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது, கடந்த வருடம் 14-04-2020 அன்று என்மீது காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலில் எனது மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டிருந்த போதும் பூவரசங்குளம் பொலிசார் எவரையும் கைது செய்திருக்கவில்லை என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

Leave a comment