Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது ! பேராசிரியர் தகவல்

கொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது ! பேராசிரியர் தகவல்

கொழும்பில் 100 சதவீதம் டெல்டா வைரஸ் திரிபு பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் திரிபு சூப்பர் டெல்டாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பேராசிரியர் நீலிகா மலவகே மற்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் பரவி வருவதாக சந்தேகிக்கப்படும் சூப்பர் டெல்டா பிறழ்வு குறித்து, தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இதுவரை பதிவான தினசரி கோவிட் மரணங்களிலேயே அதிகப்படியான மரணம் நேற்று முன்தினம், அதாவது ஆகஸ்ட் 26ல் பதிவானது. அன்றைய தினம் 214 பேர் கோவிட் நோயால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.

அதற்கு முதல் நாள், 25ம் தேதி, கோவிட் தொற்றினால் 209 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் இதுவரை 4,16,961 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 353,191 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 8,371 கோவிட் உயிரிழப்புக்கள் நாட்டில் பதிவாகியுள்ள அதேவேளை, 55,399 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் இடை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிக்கிறது.

இதேவேளை, கடந்த 20ம் தேதி நள்ளிரவு 10 மணிக்கு அமல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு, நாளை மறுதினம் (30) தளர்த்தப்படவிருந்த பின்னணியில், மீண்டும் ஊரடங்கு கால எல்லை எதிர்வரும் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த ஊரடங்கு கால எல்லை நீடிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதேவேளை, கொழும்பில் நூறு சதவீதம் டெல்டா பிறழ்வு பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

டெல்டாவின் மற்றுமொரு பிறழ்வே, கொழும்பில் பரவி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இவ்வாறு கொழும்பில் பரவி வரும் டெல்டா பிறழ்வானது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி, இலங்கையை செப்டம்பர் மாதம் 18ம் தேதி வரை மூடினால், சுமார் 7500 உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும், அக்டோபர் 3ம் தேதி வரை நாட்டை மூடினால் மேலதிகமாக 10,000 உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கோவிட் வைரஸ் பரவியுள்ள விதத்தை அவதானிக்கும் போது, வைரஸை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மக்கள் மிகவும் பொறுப்புடன் நடத்துக்கொள்ளாத பட்சத்தில், நாட்டை மேலும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என விசேட மருத்துவர் டாக்டர் பத்மா குணரத்ன குறிப்பிடுகிறார்.

Leave a comment