Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் சட்டத்தை மீறியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! நான்கு பேருக்கு கொரோனா உறுதி!!

வவுனியாவில் சட்டத்தை மீறியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! நான்கு பேருக்கு கொரோனா உறுதி!!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (23.08) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர் வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்படுபவர்கள் மீது பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா நகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, குருமன்காடு சந்தி, பசார் வீதி மற்றும் ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றில் துவிச்சக்கர வண்டி, மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 38 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் ஆச்சிபுரம், மடுகந்தை, தரணிக்குளம், மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Leave a comment