Homeசெய்திகள்இலங்கை செய்திகள்அரசு தவறுகளை உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும்! – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசு தவறுகளை உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும்! – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசுக்கு மக்கள் வழங்கிய பெரும்பான்மைப் பலம் தவறாகச் செயற்படுத்தப்படுகின்றது. அரசு தவறுகளை உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் ராஜபக்சக்கள் அனைவரும் வெகுவிரைவில் அரசியலில் இருந்து மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள்.”

– இவ்வாறு அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் சொல்வதையும், வழங்கும் ஆலோசனைகளையும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை. நாடு இன்று பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலைமை குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளோம். உரிய இடத்துக்குப் பொருத்தமான நபர் சேவையில் அமர்த்தப்படாமை தற்போதைய நெருக்கடிகளுக்கு ஒரு காரணியாகும்.

கொரோனா வைரஸ் தொடர்பில் முறையான கொள்கைத் திட்டம் செயற்படுத்தப்படவில்லை. எல்லை மீறிய அதிகாரங்கள் பலவீனமான ஆட்சி அதிகாரத்தை உருவாக்கும் என்று குறிப்பிடப்படுவது இன்று உண்மையாகியுள்ளது.

இந்த அரசுக்கு நாட்டு மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வழங்கினார்கள்.

பலமான தலைமைத்துவத்தின் கீழ் நாடு நல்லதை நோக்கிப் பயணிக்கும் எனக் கருதியே மக்கள் பெரும்பான்மைப் பலத்தை வழங்கினார்கள். ஆனால், இன்று மக்களின் எதிர்பார்ப்பு தகர்த்தப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

அதிகாரம் கூடிய பின்னர் தான்தோன்றித்தனம் ஏற்படும் என்பதைத் தற்போது உணர்ந்துகொள்கின்றோம்” – என்றார்.

Leave a comment