Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ஈஸ்டர் தாக்குதல் தற்கொலைக் குண்டுதாரியின் தந்தை விடுதலை!!

ஈஸ்டர் தாக்குதல் தற்கொலைக் குண்டுதாரியின் தந்தை விடுதலை!!

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின்போது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியாகக் கருதப்படும் அலாவுதீன் அஹமட் என்பவரின் தந்தையை விளக்கமறியலில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான அகமது லெப்பை அலாவுதீன் சுமார் ஒன்றரை வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டமா அதிபரின் ஆலோசனையைக் குற்றப் புலனாய்வு பிரிவு முன்னர் கோரியிருந்தது.

அதன்படி, சந்தேகநபருக்கு எதிராக எந்த ஆதாரமும் முன்வைக்கப்படாததால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்திருந்தார்.

இதற்கமைய குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சந்தேகநபரை விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment