Homeகட்டுரைகள்சர்வதேச பிடிக்குள் இலங்கை! தப்பி பிழைக்குமா?

சர்வதேச பிடிக்குள் இலங்கை! தப்பி பிழைக்குமா?

இலங்கைக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்த சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் வருகை காரணமாக, இலங்கை சர்வதேச அரசியலில் பரபரப்பு மிக்க நாடாக மாறியுள்ளது.
அமரிக்கா மற்றும் இந்தியாவின் எதிரி நாடாக பார்க்கப்படும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜியத்தை சாதாரணமாக பார்க்க முடியாது.
சீனா உலகத்தில் பெரும் வல்லரசாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவிற்கு போட்டி நாடாக இருக்கும் மேற்குலக முதலாளித்துவ நாடுகளின் வயிற்றில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை வருகையானது புளியை கரைத்துள்ளது.
இலங்கை ஒரு சிறிய நாடு சீனாவின் ஒரு இராஜதந்திர அதிகாரியோ அல்லது அமைச்சரோ இலங்கைக்கு வருகை தந்து பேச்சவார்த்தை நடத்தியிருக்க முடியும். அவ்வாறு இல்லாமல் சீனாவின் பாதுகாப்பு அiமைச்சர், இலங்கையில் கொரோனா உச்சம் பெற்றிருக்கும் நிலையில் விஜியம் ஒன்றை மேற்கொண்டு, சர்வதேச நாடுகளுக்கு மறைமகமாக ராசதந்திர ரீதியில் ஒரு செய்தியை சீனா சொல்லியுள்ளது.
இலங்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியாவின் தலைமையிலான மேற்குலக நாடுகளால் தங்கள் கட்டப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை, அதன் வெளிப்பாடே அண்மையில் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர் பிரச்சனையை கையிலெடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது (தமிழர்களுக்கு ஆதரவாக அல்ல).
சீனாவின் இராஜதந்திர பொருளாதார நகர்வுகளால், இந்துசமுத்திர பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, தங்களின் கையை விட்டு போவதை விரும்பாத இந்திய மற்றும் சர்வதேச நாடுகள் ஒரு அரசியல் சிக்கலை இலங்கையில் உருவாக்கி தங்களுக்கு சார்பான ஒரு ஆட்சியை இலங்கையில் ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால் ஆராம்பத்திலிருந்தே இலங்கையில், சீனாவின் நுட்பமான இராசதந்திர நகர்வுகளை இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகள் ஊகித்து கொள்ள முடியாத வகையில் நகர்த்தியிருந்தது. இலங்கையின் கொழும்பு காலிமுகத்திடலை அண்மித்த பகுதியில் துறைமுக நகரத்தை உருவாக்க ஆரம்பித்த சீனா, இலங்கையின் அரசியல் விவகாரங்களில் தலையிடாது என்ற இராசதந்திர அறிவித்தலுடன் மேற்குலக நாடுகளுக்கு சந்தேகம் வராத வகையில் தனது நாட்டின் பாதுகாப்பு வளையத்தை உருவாக்க ஆரம்பித்திருந்தது.
சீனாவினால் உருவாக்கப்படும், மண் தீவான துறைமுக நகரமானது எந்தவிதமான அரசியல் சிக்கலும் இல்லாமல் நிலைத்து நிற்க வேண்டுமானால் இலங்கையில் சீன சார்பான பலம் மிக்க அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதை உணர்ந்த சீனா சர்வதேச நாடுகளின் கண்களில் மண்ணை தூவி தனக்கு சார்பான மிகப் பலம்வாய்ந்த ஒரு அரசை இலங்கையில் நிறுவியுள்ளது.
சீனாவின், இலங்கை மீதான அரசியல் மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த முடியாத இந்தியா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீதான அரசியல் அழுத்தங்களையும், இராசதந்திர நெருக்குவாரங்களையும் உருவாக்கும் வியூகம் ஒன்றை வகுக்க ஆரம்பித்தது.
சீனாவின் துறைமுக நகரம் இலங்கையில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையிலும், இலங்கை அரசாங்கமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசியல் பலத்துடன் இருந்து கொண்டு மேற்குலக நாடுகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமலும், சிறுபான்மை மக்களின் ஒப்புதல் இல்லாமலும் பாராளுமன்றத்தில் ஸ்தீரமான அரசியல் யாப்பை உருவாக்க கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
சீனாவின் துறைமுக நகரத்திற்கு எதிராக எழும் உள்நாட்டு எதிர்ப்புக்களை கட்டுப்படுத்துவதுடன், ஒரு பலமான அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் அரசியல் கோரிக்கைகளை எதிர்க்கும் அல்லது சிங்கள மக்களுக்கு எதிரானதாக சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை காட்ட முயற்சிக்கும் ஒரு போக்கே இப்போது காணப்படுகின்றது. இவ்வாறான சிறுபான்மை மக்கள் மீதான மாற்றாத்தாய் மனப்பான்மையானது சிங்கள மக்களையும் கடும்போக்குவாத அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் என இலங்கை அரசு நம்புகின்றது.
இலங்கையில் அரசியல் யாப்பு மாற்றப்படும் பட்சத்தில் சிறுபான்மை இனங்களின் இருப்ப மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மேலோட்டமாக பார்த்தால் சிறுபான்மையினரின் இருப்பில் அல்லது அவர்களின் அரசியல் விவகாரங்களில் சர்வதேச நாடுகளுக்கு என்ன அக்கறை வேண்டியுள்ளது என தோன்றலாம், ஆனால் இங்கே தான் மிகப் பெரும் சர்வதேச அரசியல் ஒளிந்திருக்கின்றது.
அதாவது தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் அரசியலை காரணம் காட்டித்தான் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் இலங்கைக்குள் உள் நுழைய முடியும். ஆகவே இலங்கை சிறுபான்மையினர் மீதான சர்வதேச நாடுகளின் திடீர் கருசனை சீனா மற்றும் இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளை பொறுத்தே ஏற்படுத்தும்.
ஆகவே இலங்கை அரசின் சீனா சார்பு நிலை உலக நாடுகளுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ள நிலையில், சிறுபான்மை மக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை கையிலேந்திய வண்ணம் இந்தியா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கை அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உடைக்க அரசியல் அழுத்தங்களை கொடுக்கும் நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் அமையப்பெற்றுள்ள சீனாவின் துறைமுக நகரத்தை மையமாக கொண்டே சர்வதேச நாடுகள் தங்கள் அரசியல் விளையாட்டை ஆரம்பித்தள்ளது.
இலங்கையின் துறைமுக நகரமானது இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்படாது, தனித்து இயங்கும் ஒரு பொறிமுறை செயற்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதானது இலங்கையின் தேசபக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்படாமல் இயங்கும் சீனாவின் துறைமுக நகரமானது இலங்கையின் இறைமையை பாதிப்பதுடன், இலங்கை நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களையும் விசனமடைய செய்துள்ளது.
இலங்கையில் ஆட்சியமைக்க பயன்படுத்தப்பட்ட தேசபக்தர்களும், இலங்கையை தங்கள் தாய்நாடாக நேசிக்கும் மக்களும் தங்கள் நாட்டின் வளங்கள் சீனாவிற்கு விற்கப்படுவதையும், சீனா ஒரு பெரும் நிலப்பரப்பை இலங்கையில் உருவாக்கி இலங்கையின் இறைமைக்கு அப்பால் செயலாற்ற முயற்சித்திருப்பதும், இலங்கை அரசின்மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டிலும்,சீனாவின் துறைமுக நகரத்தின் மீதான நடவடிக்கைகளிலும் அதிருப்தி கொண்டுள்ள ஒரு தொகுதி மக்கள் மற்றும் அரசாங்கத்தில் அதிருப்தி கொண்ட அரசியல்வாதிகள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்நிலை எடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே அரசிற்கு எதிர்நிலை எடுக்கும் மக்களை திருப்திப்படுத்த சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதன் மூலம், சிங்கள மக்களை திருப்திபடுத்த இலங்கை அரசு முனைகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவிடமிருந்து பல மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ள இலங்கை அரசு, சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி நிற்கின்றது.
இவ்வாறாக இலங்கை அரசிற்கு பல அரசியல் அழுத்தங்கள், சீனாவின் துறைமுக நகரத்தை காரணம் காட்டி உருவாகி வரும் நிலையில், சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜியம் சர்வதேச நாடுகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உலக வல்லரசுகளுக்கு கடன் கொடுத்துவரும் முதல் நாடாக சீனா இருப்பதுடன் பொருளாதாரத்தில் மிகப் பலம் பொருந்திய நாடாகவும் இருந்து வருகின்றது.
சீனாவின் பொருளாதார இராசந்திர நகர்வுகளின் ஒரு பகுதியாக தான் ஆக்கிரமிக்க போகும் நாடுகளுக்கு அதிகளவான கடன்களை வழங்குவதுடன், உலகநாடுகள் மற்றும் உலக வங்கி கணக்கில் கண்டுபிடிக்க முடியாத வகையிலும் பெரும் கடன்களை தனது நேச நாடுகளுக்கு சீனா வழங்கி வருகின்று.
சீனாவினால் ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு நேரடியாக கொடுக்கப்படும் கடன்கள் மாத்திரமே உலக வங்கியினால் கணக்கிடப்பட முடியும், ஆனால் சீன நாட்டின் நிறுவனங்கள் ஊடாக கடனை வழங்கும் போது, நேச நாட்டின் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிகளை உலக வங்கியினால் கணக்கிட முடியாது இதன் காரணமாக சீனா பாரியளவான நிதிகளை தான் ஆக்கிரமிக்கும் நாடுகளுக்கு கடனாக வழங்க முடியும். இது சீனாவிடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்ளும் நாடுகள் மீண்டும் சீனாவிற்கு கடனை செலுத்த முடியாத கையறு நிலையை ஏற்படுத்துவதோடு சீனா அரசின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
உலக வங்கியால் கொடுக்க முடியாத கடன்களை சீனா வளர்ந்துவரும் நாடுகளுக்கு கொடுக்கின்றது. அமரிக்கா 2008 இல் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த தருணத்தில் சீனா பெருந்தொகை நிதியை சுமார் (ஒரு இலட்சம் கோடி டொலர்) வளங்கியுள்ளது. இவ்வாறாக சீனா வழங்கும் கடன்கள் மூலமாக தனது நலன்களை சீனா சாதித்து கொள்கின்றது என்பது உலக நாடுகளின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.
சீனாவின் கடன் வழங்கும் திட்டமானது நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை தாண்டி, கடன் பெற்ற நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இந்த கடன் கொடுத்தலை சீனா பயன்படுத்தி வருகின்றது. இவ்வாறான நிலையிலேயே சீனாவிடம் கடன் பெற்ற நாடுகளை தங்கள் இராசதந்திரத்திற்குள் சிக்க வைக்க முடியாமல் உலக நாடுகள் தடுமாறி வருகின்றன.
சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதியிலேயே தங்கியுள்ளது எனவே சீனா தனது ஏற்றுமதி போக்குவரத்திற்கு ஒரு பாதுகாப்பான கடல் வழிப்பாதையான முத்துமாலை திட்டத்தை உருவாக்கி, தனது கடன் கொடுக்கும் வல்லமையால் பல நாடுகளில் பாரிய துறைமுகங்களையும் உருவாக்கி தனது பட்டுப்பாதை திட்டத்தை நிறைவேற்றி வந்துள்ளது. வளர்முக நாடுகளில் சீனாவினால் உருவாக்கப்பட்ட முத்துமாலை திட்டத்திற்குள் அகப்பட்டு அம்பாந்தோட்டை துறைமுகமும் அதனை சூழவுள்ள நிலங்களும் பறிபோயுள்ளது.
சீனாவின் பட்டுப்பாதை திட்டம் மற்றும் முத்துமாலை திட்டத்தினூடாக கடல்பகுதிகளை அண்டியுள்ள வளர்ந்துவரும் நாடுகளுக்கு கடன்களை அள்ளி வழங்கிய சீனா அதனூடாக அந்நாடுகளை தனது கட்டப்பாட்டுக்குள் கொண்டு வந்ததானது சர்வதேச அதிக்க சக்திகளுக்கு பெரும் தலைவலியாக மாறியது.
இதன் தொடர்ச்சியாகவே சீனாவின் இராசதந்திரத்தை புரிந்து கொள்ளாத இலங்கை அரசு பெரும் கடன்களை சினாவிடமிருந்து பெற்றதன் மூலம் சீனா சொல்வதற்கு தலையாட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முனையும் எதிர்க்கட்சிகள், நாட்டை சீனாவிற்கு இலங்கை அரசு விற்கப்போகுது, சீனாவின் கொலனியாக இலங்கை மாறப்போகுது என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து மக்களை திசைதிருப்புவது மற்றும் அரசாங்கத்தின் அதிப்தியாளர்களை கவர்ந்திழுப்பதுடன் எதிர்க்கட்சிகள் பலமடைவதன் மூலம் இலங்கையை காப்பாற்றலாம் என்ற பிம்பத்தை சர்வதேச நாடுகள் உருவாக முனைகின்றது.
இதன் காரணமாகவே அண்மை காலத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவை சந்தித்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
ஆனால் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் உருவாகினால் கூட சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்க முடியாது, காரணம் பெரும் கடன்சுமை இலங்கைமீது சீனாவினால் ஏற்றப்பட்டுள்ளது. சீனாவினால் துறைமுகநகரம் கட்டப்பட்ட தருணத்தில் மகிந்த ராஜபக்ச பதவியிழந்து மைத்திரிபால சிறிசேனா ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் நல்லாட்சியை உருவாக்கிய வேளையில் கூட சீனாவின் துறைமுக நகரத்தின் கட்டுமானப்பணிகளை நிறுத்த ரணில் விக்கிரமசிங்கயால் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை, காரணம் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருந்த கடன் சுமை உடனடியாக திருப்பிக் கொடுக்க முடியாதவகையில் அமைந்திருந்தது.
இலங்கை அரசு மீண்டும் சர்வதேச நாடுகளின் அரசியல் அழுத்தத்திற்குள் சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில், உலகில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் அதிகமாக இருக்கும் இத்தருணத்தில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் வருகை முக்கியமான செய்திகளை சர்வதேச நாடுகளுக்கு சமிக்கையாக சொல்லியுள்ளது.
இலங்கை எங்களுடைய நிலம் என்பதை சீன பாதுகாப்பு அமைச்சர் உலக நாடுகளுக்கு சூட்சுமமான முறையில் சமிக்கையாக அறிவித்துள்ளார். பொருளாதார ரீதியாகவோ, கலாசாரம் சார்ந்த ரீதியாகவோ சீனாவின் வருகை அமையப்பெறவில்லை மாறாக சீனாவின் பாதுகாப்ப அமைச்சரின் வருகை மறைமுகமாக இந்தியாவிற்கும், மேற்குலக நாடுகளுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. முதலாவது சீனாவின் பாதுகாப்பில் இலங்கை முக்கிய பங்குவகிக்கிறது என்பதை அடையாளப் படுத்தியுள்ளதுடன், இலங்கையின் பாதுகாப்பு எமது கைகளில் உள்ளது என்பதனை உலக நாடுகளுக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளது. அத்துடன் இலங்கை அரசை சர்வதேச நாடுகள் மிரட்ட அல்லது அழுத்தங்களை பிரயோகிக்க சீனா அனுமதிக்காது என்ற எச்சரிக்கையும் காட்டப்பட்டுள்ளது. சீனா எப்போதம் இலங்கை மக்களை கைவிடாது என காட்டுவதற்கும், இலங்கை அரசிற்கு நம்பிக்கை ஊட்டுவதற்கும், சீனப்பாதுகாப்பு அமைச்சரின் நேரடி விஜியம் உணர்த்தியுள்ளது.
இலங்கைமீது கைவைப்பது அல்லது எதிர்ப்பதானது சீனாவை எதிர்ப்பதற்கு சமமானது என்பதனை சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு, சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் வருகை உணர்த்தியுள்ளதுடன், உலக நாடுகளின் இராசதந்திர போர்க்களமாக இலங்கை மாறிப்போயுள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையை இலகுவில் விட்டுக்கொடுக்காது, சர்வதேச ஆக்கிரமிப்பை சீனாவும் இலங்கையில் அனுமதிக்காது. ஆகவே இலங்கை நெருக்கடி மிக்க சர்வதேச இராசதந்திர பனிப்போருக்குள் பிரவேசித்துள்ள நிலையில், சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பறிபோகுமா? அல்லது வழங்கப்படுமா? என்கின்ற பெறுமதியான கேள்வியும் இருக்கின்றது.
விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்க எதிராகவும், விடுதலைப்புலிகளை தடை செய்யாத சீனா நாடானது இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் செயற்பட்டுவரும் வினோதமான ஒரு அரசியல் கண்ணாமூச்சி ஆட்டத்தினை சர்வதேசம் ஆடிவரும் நிலையில், தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் சர்வதேச அரசியலை சரியாக நாடி பிடித்தறியும் வல்லமை இருந்தால் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும்.
-எம்.ஜி.ரெட்னகாந்தன்-

Leave a comment