Homeசெய்திகள்இலங்கை செய்திகள்தடுப்பூசி திட்டத்தில் சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வேண்டும்!வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

தடுப்பூசி திட்டத்தில் சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வேண்டும்!வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

கொரோணாவின் தாக்கமானது கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் அதிகரித்து வருகின்றது. தற்சமயம் நாளொன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ் அதிகரித்த தொற்றானது சுகாதாரத் துறைக்கும் சுகாதார உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நெருக்கடியான நிலமையையே எற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல புதிய சிகிச்சை நிலையங்களை ஆரம்பித்து தொற்றாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை மட்டுப்படுத்தப்பட்ட ஆளணிகளுடன் வழங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களிற்கு மேலாக சுகாதார பணியாளர்கள் பல இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் தொடக்கம் அதிதீவிர சிகிச்சை நிலையங்கள் வரை தமது சேவையை வழங்கி வருகின்றனர். இன்றுவரை இவ்வாறான கடமைகளில் ஈடுபடுகின்ற சுகாதார பணியாளர்களுக்கு எவ்விதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை. மாறாக உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் கொரோணா தாண்டவத்திற்கு வைத்தியர்கள் உள்ளடங்கலாக பல சுகாதார பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்றுவரை உயிர் நீத்துள்ளனர்.
இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் சுகாதார பணியாளர்களாகிய நாங்கள் எமது பணிகளை நோயாளர்களினது நலனுக்காக வழங்க வேண்டியது எமது முதல் கடமையாகும் .அதே வேளை எமது குடும்ப உறுப்பினர்களையும் இவ் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டியதும் எமது கடமையாகும்.
தினசரி தொற்றாளர்களுக்கு தேவையான கடமைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதனால் எமது குடும்ப உறுப்பினர்களின் தொற்று பரம்பலுக்கு நாமே காரணமாகிவிடுவோம் என அச்சமும் கொண்டுள்ளோம்.
மற்றும் அரசாங்கத்தின் பொதுமக்களுக்கான தடுப்பூசி வழங்கும் கொள்கையின் படி “அதிக தொற்று ஏற்படுமென இனங்காணப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமையில்” தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய சுகாதார பணியாளர்கள் ஒவ்வொருவருடைய வீட்டினிலும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றது.
எனவே தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் சுகாதார பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்கி மன ஆறுதலுடன் எமது பணிகளை ஆற்றக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு அரசிடம் வலிந்து கேட்டுக்கொள்கின்றோம்
இவ் விடயம் சார்பாக இன்று எமது சங்க பிரதிநிதிகள் வடமாகாண ஆளுனருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட போது அதற்குரிய பதிலை விரைவில் தெரிவிப்பதாக வடமாகாண ஆளுநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment