Homeகட்டுரைகள்கவனயீனம் காரணமாக பலியெடுக்கும் விபத்துக்கள்! உயிரை இழக்கும் அப்பாவி பொதுமக்கள்!!

கவனயீனம் காரணமாக பலியெடுக்கும் விபத்துக்கள்! உயிரை இழக்கும் அப்பாவி பொதுமக்கள்!!

கவனயீனம் காரணமாக பலியெடுக்கும் விபத்துக்கள்! உயிரை இழக்கும் அப்பாவி பொதுமக்கள்!!

இலங்கையில் விபத்தின் காரணமாக உயிரை இழக்கும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இலங்கையில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களை விட விபத்தின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நாட்டில் 2020 ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் கூட விபத்துக்களின் காரணமாக பலர் மரணமடைந்தனர்.
விபத்தின் காரணமா உயிரிழப்பவர்கள் இரண்டு வகைப்படுகின்றனர். ஒன்று சாரதிகள் தங்களின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்களை ஏற்படுத்தி பொதுமக்களின் உயிரை பறிப்பது. இரண்டாவது மோட்டர் சைக்கிளை செலுத்தும் நபர்கள் தமது வேகக் கட்டப்பாட்டை இழந்து தாங்களே விபத்துக்களில் சிக்கி மரிணித்து போவது இவ்வாறான விபத்துக்கள் இலங்கையில் 2020 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 20 பேர்வரை மரணமடைவதாக சுகாதாரத்துறையின் புள்ளிவிபரங்கள் கூறியபோதிலும் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு விபத்தால் மரிணிப்பவர்கள் 15 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நேர்கத்துடன் பல சட்டதிட்டங்கள், அறிவூட்டல்கள் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்களின் உயிர் பறிக்கும் வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றது.
வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு சாரதிகளின் கவனயீனமே பிரதான காரணமாக அறியப்பட்டாலும், அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்களுக்கான காரணம் குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய வேலைகளை செய்து முடிப்பதற்காக பொறுமையிழந்து அதிவேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மாத்திரம் காரணமா? ஏன்ற கேள்வி இருக்கின்றது.
வீதி சட்டதிட்டங்களை அலட்சியம் செய்து வாகனங்களை அதிவேகமா செலுத்தும் சாரதிகள் தங்கள் உயிருக்கு உலை வைப்பதுடன் அவர்களை நம்பி பயணிக்கும் பொதுமக்களின் உயிர்களையும் காவு வாங்கி விடுகின்றனர். இதன் காரணமாக உயிரை பறிகொடுத்த உறவுகளின் அவலங்களும், அழுகுரல்களும் காலத்திற்கும் ஆறாத வடுக்களாக தொடருகின்றது.
அது மாத்திரமன்றி வீதி விபத்;துக்கள் காரணமாக தங்கள் அவயவங்களை இழந்தவர்கள், நடைபிணங்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் பொலிஸ் திணைக்களத்தின் புள்ளி விபரத்தின் படி மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும் விபத்துக்கள் முதலிடத்திலும், முச்சக்கர வண்டிகளினால் ஏற்படும் விபத்துக்கள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் விபத்துக்களின் காரணமாக இறப்பு புள்ளி விபரங்கள் அதிகரித்து செல்லும் நிலையில் அதற்காக தெரிவிக்கப்படும் காரணங்கள் ஒரு சாக்கு போக்காகவே இருக்கின்றது.
அந்தவகையில் அண்மையில் பதுளை பசறைப்பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்து மற்றும் மன்னார் பகுதியில் புகையிரதத்துடன் பேரூந்து மோதி ஏற்பட்ட விபத்துக்கள் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தன.
பதுளை பசறைப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த பேரூந்தானது வீதியை விட்டு விலகி மலைப்பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் உருண்டு வீழ்ந்து உருக்குலைந்து போனதுடன் அவ்விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்து பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இவ்விபத்தின் காரணமாக பல குடும்பங்கள் நிர்க்கதியானதுடன் பல குழந்தைகள் ஆனாதைகளாகியுள்ளனர். இந்த விபத்து நடந்திருந்த விதமானது அங்கு ஒரு வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரவில் பதிவாகியிருந்ததானது விபத்து எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதனை வெளிக்கொணர்ந்திருந்தது.
மலைப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உருண்டு வந்த பாறாங்கல் ஒன்று வீதியில் அகற்றப்படாமல் இருக்கின்றது. பேரூந்தின் எதிர்திசையில் பயணித்த டிப்பர் கனகரக வாகனம் பாறாங்கல்லை விலத்தி செல்ல முற்படுகின்ற சமயத்தில் எதிரே தனது பாதையில் வேகமாக வந்த பேரூந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
உண்மையிலேயே இவ்விபத்துக்கு சாரதியின் கவனக்குறைவு காரணமாக இருந்தாலும் அந்த சரதியை மாத்திரம் குற்றஞ்சாட்டி விட்டு தப்பித்துவிட முடியாது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழந்த கற்பாறையை வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உடனடியாக அகற்றியிருந்தால் இந்த கோர விபத்து நடந்திருக்காது என்பதுடன் சாரதி மீது மாத்திரமல்ல இவ்விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடி;கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இலங்கையை பொறுத்தவரையில் 18 வயது பூர்த்தியடைந்ததுடன் எந்தவிதமான தகமைகளும் இன்றி சாரதி பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை பெற்று அந்த நிலையங்கள் உடாகவே சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருப்பதும் இவ்வாறான பொறுப்பற்ற விபத்துக்களுக்கு காரணமா அமைகின்றது.
பேரூந்து மற்றும் டிப்பர் போன்ற கனகரக வானங்களை இளைஞர்களே இன்று அதிகமா செலுத்தி வருகின்றனர். டிப்பர் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் வீதியில் பயணிப்பவர்கள் குறித்தோ அல்லது பயணிக்கும் வகனங்கள் குறித்தோ அக்கறை காட்டுவது இல்லை டிப்பர் போன்ற கனகரகவாகனங்களால் வீதி விபத்துக்கள் அதிகளவாக ஏற்படுத்தப்படுகின்றது. அண்மையில் யாழ் ஏ9 வீதியில் கிளிநோச்சி இத்தாவில் பகுதியில் டிப்பர் கனகரக வாகனம் காருடன் மோதியதில் தந்தை மற்றும் இரண்டு பதின்ம வயது மகன்கள் பலியான சோக சம்பவமும் நடந்து முடிந்துள்ளது.
இவ்வாறான கோர வீதி விபத்துக்கள் நடைபெறுவதற்கு சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக இருந்தாலும் போக்குவரத்து பொலிசாரின் பொறுப்பற்ற தன்மையும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
முக்கியமாக பசறை பேரூந்து விபத்து எற்பட்ட இடத்தில் வீதி பாதுகாப்பு கடமையில் பொலிசார் ஈடுபட்டிருந்தால் அன்று இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என பொது மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக வாகன ஓட்டிகளை கைது செய்வதற்காக அல்லது தண்டப்பணம் அறவிடுவதற்காக பிரதான வீதிகளை தவிர்த்து கிராமங்களின் உள்ளக வீதிகளில் கடமையில் ஈடுபடும் போக்குவரத்து பொலிசார் விபத்துகள் ஏற்படும் பிரதான வீதிகளில் சரியான முறையில் கடமையில் ஈடுபடாமையே பரிய விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றது.
பிரதான வீதிகளில் போக்குவரத்து பொலிசார் கடமைகளில் ஈடுபடவில்லை என்பதை தெரிந்து கொள்ளும் சாரதிகள் வீதி ஒழுக்கவிதிகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையும் அற்றவர்களாக வாகனங்களை செலுத்த ஆரம்பிக்கின்றார்கள். இவ்வாறாக தகுதியில்லாத சாரதிகளின் கோமாளித்தனங்களால் கோரோனா லொக்டவுண் காலப்பகுதியில் கூட பல பிரதான வீதிகளில் பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
வாகனங்களை செலுத்தும் சாரதிகள் கைபேசிகளை பாவிப்பதும், வாகனங்களை முறையற்ற முறையில் முந்தி செல்ல முற்படுவதும் பாரிய விபத்துக்களுக்கு காரணமாக அமைவதுடன் பேரூந்தை செலுத்தும் சாரதிகளிடம் காணப்படும் போட்டித்தன்மையும், பயணிகள் பற்றிய எந்தவிதமான சிந்தனைகளும் இன்றி ஆட்களை சேர்ப்பதில் மாத்திரம் குறியாக இருப்பதும் விபத்துக்கு காரணமாக இருப்பதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதே போல் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மன்னார் பியர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பாடசாலை மாணவன் பலியானதுடன் 17 பேர் படுகாயமடைந்திருந்தனர். புகையிரத கடவையில் காவலுக்கு நின்றவர் அத்தருணத்தில் காவலுக்கு இருந்திருக்கவில்லை என விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக தெரிவித்து காவலாளி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள புகையிரத பாதுகாப்பு கடவையானது பொலிசாரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றது. அக்கடவையில் பாதகாப்பு பணியாற்றும் ஊழியர்களுக்கு பொலிசாரே கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றனர். ஒரு நாளைக்கு வெறும் 250 ரூபாய்க்கு கடமையாற்றும் புகையிரதக்கடவை ஊழியர்களுக்கு விபத்து நடைபெற்ற கடவையில் பாதுகாப்பு காவல் கொட்டகை அமைத்து கொடுக்கப்படவில்லை என்றும் புகையிதத்திற்கு சமிக்கை கொடுக்கும் சிகப்பு மற்றும் பச்சை கொடிகள் மற்றும் புகையிரதம் பயணிக்கும் நேரசூசிகள் காவலாளிகளுக்கு பொலிசார் வழங்கியிருக்கவில்லை என்றும் வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின தலைவர் எஸ்.ஜே.ரொகான் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் விபத்து ஏற்பட்ட அன்றைய தினம் புகையிரதமானது குறிப்பிட்ட நேரத்திற்கு 25 நிமிடம் முன்னதாகவே குறித்த பாதுகாப்பு கடவைக்கு வந்துள்ளது. புகையிரதக்கடவை காவலாளி பாதுகாப்பு கொட்டகை இல்லாத காரணத்தால் 30 மீற்றர் தொலைவிலுள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து புகையிரதக்கடவையை கண்காணித்துள்ளார். புகையிரதம் 25 நிமிடம் முன்னாடியே வரும் என்ற அறிவித்தல் குறித்த காவலாளிக்கு வழங்கப்படாததால் காவலாளியின் மீது குற்றச்சாட்டை சுமத்தி பொலிசார் தப்பிக்க முயற்சிக்கின்றனர் என புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து பேரூந்துகளை செலுத்தும் சாரதிகள் அபாயகரமான வீதிக்கடவைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பொதுவான போக்குவரத்து விதிமுறையாக இருக்கின்றது. வாகனங்களை செலுத்தம் சாரதிகள் அனுமதிப்பத்திரம் பெறும்போது வீதிப் போக்குவரத்து விதி முறைகளில் பாதுகாப்பான புகையிரதக்கடவை, பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை போன்றவற்றை எவ்வாறு தெரிந்து கொள்வது மற்றும் புகையிரதக்கடவைகளை கடந்து செல்லும்போது எப்போதும் அவதானிப்புடனும் முன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத பேரூந்து சாரதியின் கவனயீனம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கின்றது. இவ்வாறான கவனயீனங்கள் காரணமாக பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பறி கொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கின்றனர்.
இலங்கையில் வீதிப் போக்குவரத்து தொடர்பாக இரண்டு பிரதான சட்டதிட்டங்களை பொலிசார் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஒன்று மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிரானது, மற்றையது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் அறவிடுவது.
மது பாவித்தபின் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுடன் அவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்து அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாலும், நீதிமன்றம் ஒரு தொகை தண்டப்பணத்தை குற்றவாளியிடமிருந்து அறவிடுவதாலும் மது போதையில் வாகனத்தை செலுத்துவதால் ஏற்படும் வீதி விபத்துக்கள் அண்மைக்காலத்தில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் அறவிடும் போது அவர்கள் தண்டப்பணத்தை செலுத்தி தப்பிபித்து விடுகின்றனர். அல்லது தண்டப்பணம் செலுத்தினால் சரி எனகின்ற மனநிலை உருவாகியுள்ளது. இந்த விடயத்தில்தான் பொலிசார் மீதும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் பரவலாக சுமத்தப்படுகின்றது. இதன் காரணமாக சாரதிகள் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர்.
குறிப்பாக கனகரக வாகனங்கள் செலுத்தும் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் அதில் சித்தி பெறுபவர்களுக்கு மாத்திரமே சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும், விசேடமாக டிப்பர வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்படுவதுடன் விதிமுறைகளை மீறும் டிப்பர் வாகன சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட வேண்டும், பாடசாலை நேரங்களில் நகரப்பகுதிகளுக்குள் கனகரக வாகனங்கள் பார ஊர்திகள் அனுமதிக்கப்பட கூடாது அது பிரதான வீதியாக இருந்தாலும், பாடசாலை மாணவர்கள் செல்லும் நேரம் மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு கனகரக வாகனங்கள் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இச்சட்டஙகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
எவ்வாறெனினும் பசறை பேரூந்து விபத்து மற்றும் மன்னார் புகையிரதம் பேரூந்து விபத்துக்களுக்கு ஒரு நபரின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒரு நபரை குற்றவாளியாக்கி ஏனைய பொறுப்புக்கூற வேண்டிய திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு கடமைகளை சரிவரச் செய்யாத பொலிஸ் அதிகாரிகள் சட்டத்திலிருந்து தப்பவிடப்படுவார்களானால் மேலும் கவனயீனம் காரணமாக நடைபெறும் பாரிய விபத்துக்களை தடுக்க முடியாமல் போவதுடன் அப்பாவி பயணிகளின் உயிர்கள் தொடர்ச்சியாக பலியாவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே உருவாகும்.

Leave a comment